Followers

Sunday, May 15, 2011

வைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை


இராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற இரு பிரிவுகள் தோன்றின. வேங்கட நாதர் என்ற வேதாந்த தேசிகர் என்பார் காஞ்சிபுரத்திற்கு அருகில் துப்பில் எனும் கிராமத்தில் பிறந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இவர் வைணவர்களிடையே வடகலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார். ஏறத்தாழ அதே காலக்கட்டத்தில் ஆழ்வார் திருநகரியில் தோன்றிய மணவாள மகாமுனி என்பார் தென்கலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார்.
     குறிப்பிட்ட சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினர்கள் மாறுபட்டனர். அவற்றில் சில,

           1. காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வடகலைப் பிரிவு வளர்ந்தது. ஸ்ரீரங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தென்கலைப் பிரிவு வளர்ந்தது.

  2.வடகலையினர் வடமொழியில் மட்டுமே வழிபாடு அமைய வேண்டும் என்றனர். தென்கலையினர் தமிழில் வழிபாடு அமைய வேண்டும் என்று 
வாதாடினர்.

      3.வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளை மட்டுமே பின்பற்ற வடகலையினர் விரும்பினர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களையே சார்ந்திருக்கத் தென்கலையினர் நாட்டம் கொண்டனர்.

    4.வடகலைப் பிரிவினர் ஒவ்வொரு மனிதனும் சுயமுயற்சியால் முக்தியடைவதை வலியுறுத்தினர். சுய முயற்சியால் முக்தியடைய முடியாத நிலையில் இறைவன் அருள் செய்வான். தென்கலையினர் இறைவனே தனி மனிதனை வழி நடத்தி ஆட்கொள்ள வேண்டும் என்றனர்.

     5.வடகலைப் பிரிவினர் வர்ணாசிரம முறையை நம்பினார். சாதி வேறுபாடுகளின் அடிப்படையில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் தென்கலையினர் இறைவனின் முன் அனைவரும் சமம் எனக் கருதினர்.

   6.வடகலையினர் தரையில் விழுந்து வணங்குதலைச் சிறியவர்கள் பெரியவர்களிடம் செய்ய வேண்டும் என்றும் ஒரு பிராமணனைப் பிராமணன் அல்லாதவனே அவ்வாறு வணங்குதல் முறை என்றும் நம்பினர். ஆனால் தென்கலையினர் சாதி மற்றும் வயது வேறுபாடின்றி ஒருவரையொருவர் தரையில் விழுந்து வணங்குவதில் தவறில்லை எனக் கருதினர். 

        
   7.வழிபாட்டின் போது  மணியடித்து வழிபடும் வழக்கத்தை வடகலையினர் பின்பற்றினர். தென்கலையினர் இது அவசியமில்லை எனக் கருதினர். 

  8.வடகலையினரின் நாமம் கீழே பாதமின்றி இருந்தது. தென்கலையினரின் நாமத்தின் கீழ் சிறிய பாதம் இடம் பெற்றது. 


  9.வடகலையினர் இலக்குமியைக் கடவுளின் உதவியாளராகவே கருதினர். பாவம் செய்தவர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் பரிந்து பேசும் பணியே இலக்குமியுடையது என்பது தென்கலையினரின் கருத்து.

  10. வடகலையினர்  யாகங்களிலும்  பலியிடுதலிலும் நம்பிக்கை வைத்தனர். தென்கலையினர் மிருகங்களைத் துன்புறுத்துதல் பாவம் என்றனர். இத்தகைய மாறுபட்ட கருத்துகளில் பலவற்றைப் பின்பற்றி வைணவத்தில் இன்றும் இரு பிரிவுகள் உள்ளன.
 

1 comment: