Followers

Wednesday, October 5, 2011

இன்னுமா உடன்கட்டை...?







சின்னஞ்சிறு வயதில்
தன்னந்தனியாக
தவித்திருந்த என்னை
தத்தெடுத்தார்...
தவமென பாதுகாத்தார்....


தத்தெடுத்தவருக்கு ஆறு வயது
தந்தையானது – அந்த
இளம் மனது.


காலை மாலை
என இரு வேளையிலும்
எனக்கு நீராடல்...


கூர்வாளேந்திய
படை வீரர்கள் – எம்
தந்தை இல்லாத போது
எமைப் பாதுகாக்க...


அவரது அரவணைப்பில்
அழகாய் வளர்ந்தேன்
பருவமடைந்தேன்...
காதல் மணம் கொண்டேன்...
எதிர்க்கவில்லை என் தந்தை...
இருப்பினும்
என் தந்தையிடமே
வளர்ந்தேன் ...
எம்  பிள்ளைகளையும்
எம் தந்தை தான் வளர்த்தார் – ஆனால்
எம் மீதுதான் பாசம் அதிகம்....


மனம் கலங்கும் போதெல்லாம்
மணிக்கணக்காய் முறையிடுவார்...
வருத்தத்தைப் போக்க
வருடிக் கொடுப்பேன்...
அந்த இதத்திலே
அவர் இதமாக உறங்கிடுவார்...


ஒருநாள்,
பெற்ற பிள்ளைகள்
புறக்கணிக்க...
தத்துப் பிள்ளை நான்
பாசமுடன் வருடிக்கொடுக்க...
ஏனோ உறங்கிவிட்டார்
நிரந்தரமாக....


சொந்தமும் பந்தமும்
சூழ்ந்துக் கொண்டன.
எம் தந்தையை
பெருமையாக பேசின.


சுமையென கருதிய
சுருக்குக் கயிறான
பெற்ற மக்களை
எவரும் சாடவில்லை.


பெற்றவரையே கொன்றவருக்கு
எம்மைக் கொல்வது
எம்மாத்திரம்...


பெற்ற மக்களை விட
எம்மிடம் தான்
பாசம் அதிகமாம்.
உடன்கட்டை ஏற்றப்பட்டேன்.
எனக்கு சம்மதம்தான்
என் தந்தையின் சாம்பலோடு
நான் சாம்பலாக...

                                -  இப்படிக்கு
                   மாமரம்.


2 comments:

  1. சில மனித மரங்களுக்கு இது போன்ற மாமரங்களே
    மதிப்புமிக்கவை!
    அருமை நண்பா!

    ReplyDelete
  2. கோகுல் said...
    சில மனித மரங்களுக்கு இது போன்ற மாமரங்களே
    மதிப்புமிக்கவை!
    அருமை நண்பா!//
    // தங்களது கருத்துரைக்கு நன்றி நண்பா...

    ReplyDelete