Followers

Thursday, May 12, 2011

ஆவி உலகின் தோற்றம்


   
      ஆரம்ப காலத்தில் மனிதர்கள் கூட்டமாய், குலமாய் வாழ்ந்தனர். குலம் என்பது கணம் என்றழைக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு தலைவன் இருந்தான். அவனை குலபதி, கணபதி என்றழைத்தனர்.
வேட்டையிலும், படைகளிலும் அவனே தலைமைத் தாங்கினான். வேட்டையிலோ அல்லது போரிலோ தலைவன் இறந்து போனால் துக்கம் தாளாது  குலம் முழுமையுமே தற்கொலை செய்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது.மலை உச்சியிலிருந்துக் கீழே குதிப்பது, காட்டாற்று வெள்ளத்தில் குதிப்பது, மர உச்சியிலிருந்துக் கீழே நட்டு வைத்த குச்சிகள் மீது விழுவது என தற்கொலை செய்துக்கொண்டனர். இந்த மூடத்தனத்தை நிறுத்தும் தந்திரமாகவே ஆவி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது.

           “நம் தலைவன் இறந்தால் மற்ற அனைவரும் மடிய வேண்டாம். தலைவனின் உடல்தான் மடிந்ததே தவிர அவனது உடல் கூட்டுக்குள்ளிருந்த ஆவி வெளியேறி விடும். அந்த ஆவி காற்றில் உலவிக் கொண்டிருக்கும்.  அந்த ஆவி இரவில் நமக்குக் காவல் காக்கும். வேட்டையின் போது வழிகாட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் தலைவனின் உடலைப் புதைத்து, அந்த புதைமேட்டில் தலைவன் எதெல்லாம் விரும்பி உண்டானோ அந்தப் பொருள்களைப் படையலிட்டு, நமது வேண்டுதல்களைக் கூறினால் தலைவனின் ஆவி நிறைவேற்றித்தரும் என்று ஆரம்பகாலப் புரோகிதர்கள் கூறினர். இதன் மூலம் குலத்தின் தற்கொலையைத் தடுத்தனர்.

     ஆதி மக்களுக்கு இதன் எதிர் விளைவாக ஒரு அடிப்படையான சந்தேகம் முளைத்தது. மனிதன் இறந்து அவனுடைய ஆவி இருக்குமென்றால் நாம் வேட்டையாடிக் கொன்றுத் தின்ற மிருகங்களின் ஆவி நம்மைப் பழித் தீர்க்குமே என்பதுதான் அந்த சந்தேகம். எனவே, தாங்கள் கொன்றுத் தின்ற மிருகங்களின் தலையை வைத்து “ எங்களை மன்னித்துவிடு; எங்களுக்கு உணவளிக்கும் தாய் நீதான் “ என்று வணகினர்.

     நல்லவன் செத்தால் அவனது ஆவி இருக்குமென்றால் கெட்டவன் செத்தால் அவனது ஆவியும் இருக்குமே என்ற கேள்வியும் அடுத்து எழுந்தது. நல்ல ஆவி, கெட்ட ஆவிப் பற்றி கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் ஆய்வு செய்து, அவர் பரிசுத்த ஆவி என்ற கருத்தை உருவாக்கினார். கி.மு.361-ல் அரிஸ்டாட்டில் உருவாக்கிய பரிசுத்த ஆவியை பிற்காலத்தில் பைபிள் தனதாக்கிக் கொண்டது என்றும், ஆவியே பிற்காலத்தில் ஆன்மாவாகப் பரிணமித்தது என்றும் சோவியத் அறிஞர் கே.பிலேட்டோநோவ் குறிப்பிட்டுள்ளார்.  


No comments:

Post a Comment