Followers

Sunday, July 31, 2011

பாண்டியனாக மாறிய சிவன்





சிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.
சிவன் தமிழ்க் கடவுளாக இருந்தால் தமிழ் நாட்டில் அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதி எதுவாக இருக்கும்...? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ஆட்சி செய்த பாண்டியன் சிவனாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம்! ஆதி காலத்தில் நாம் கணங்களாக (குழு) வாழ்ந்து வந்தோம் என்பது நாமறிந்ததே! சிவனைச் சார்ந்து வாழ்ந்த கணங்கள், சிவ கணங்கள் என்றே அழைக்கப்பெற்றன. சிவ கணங்களுக்கு நெருப்பையும் இரும்பையும் பழக்கமாய் விட்ட பொருட்கள். உணவை வேக வைத்து உண்ணவும், இரும்பைக் காய்ச்சிக் கருவிகள் வடிக்கவும், மட்பாண்டம் செய்யவும், மிருகங்களின் தோலை உடுத்தவும், தோலால் துடி போன்ற கருவிகள் செய்யவும் கற்றிருந்தனர்.

      சிவன் தன் சில கணங்களுடன் இமயம் சென்று அங்கிருந்த காட்டு தலைவன் மகளாகிய பார்வதியை மணந்தான். இந்நிலையில் அவுணர் என்ற காட்டுக் கூட்டம் நாவலந்தீவினுள் நுழைந்து மதுரை வரையில் அங்கிருந்த சிவ கணங்களை துரத்தி அடித்தது.

      சிவன் மதுரையில் அக்காட்டுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தி எதிர்த்துப் பொருது வென்று, அவர்களைக் கொன்று, நெருப்பிட்டுக் கொளுத்தினான். அவன் அவுணர்கள் எரியுண்ட சுடலைப் பொடியை மேனியிற் பூசி, வெண்ணிறம் எய்தி, வெறி தணியாது ஆடினான். அப்பொழுது அவன் வெண்மை பெற்று விளங்கியதால் பாண்டியன் எனப் பெயர் பெற்றான்.

பெயர் காரணம் :

பாண்டு என்பது வெண்மை நிறம் குறிக்க பயன்படும் ஒரு சொல்.

வெண்மையாய் சுடப்படும் மட்கலம் “பாண்டு+அம் = பாண்டம்” என குறிக்கப் படுகிறது.

இந்திரனின் ஆசனம் வெண்மை நிறம் பெற்ற கம்பளம். அது பாண்டு கம்பளம் என்று பெயர் பெரும்.

“பாண்டு+அரங்கம் = பாண்டரங்கம்” என்பது சுடலையைக் குறிக்கும்.

அவுணர் எரியுண்ட சுடலை அரங்கில் சிவன் ஆடிய கூத்தினைப் பாண்டரங்கம் என்பார். இது பதினொரு கூத்துகளில் ஒன்று.

அவுணர் எரியுண்ட சாம்பலை மேனியில் பூசியதால் சிவன் பாண்டு (வெண்மை) நிறம் பெற்றான். அதனால் அவனை பாண்டியன் என்றழைத்தனர். இவ்வாறு அவுணரை வென்று தமிழ்க்குல வெற்றியை நிலைபெறச் செய்த சிவன், நாவலந் தீவினில் தன்னிகரற்ற தலைவனாய் விளங்கி, இமயம் சென்று பார்வதியுடன் அரசு எய்திருந்தான். சிவன் காலத்திலேயே அவனைச் சார்ந்த சிவகணங்கள் தொழில், விருப்பம் ஆகியவற்றின் காரணமாய் கால்நடைகளைப் பேணிக் காட்டில் வாழும் முல்லை நிலத்தவராய், விளைப்பொருட்களைப் பேணி பரண் கட்டி வாழ்ந்த குறிஞ்சி நிலத்தவராய் மாறினர். இந்நிலையில்தான் அக்கணங்களுக்கிடையே  ஒவ்வொரு கணத்திற்கும் ஒவ்வொரு தலைவன் தோன்றினர்.

ஆனால் சிவனைப் போன்றே தணியாத வெறியுடன் சிவனையே தலைவனாகக் கொண்டு சுற்றித் திரிந்த கணங்கள், சிவன் இயற்கை எய்திய காலையில், தமக்குரிய வாழ்விடங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். எனவே அக்கணங்கள் இரு பெரும் தொகுதிகளாக பிரிவுற்றன. போர் தொழிலில் விருப்புற்ற ஒரு தொகுதி அவுணர் எரியுண்ட நடு நாடாகிய பாண்டிய நாட்டின்கண் சிவனின் நினைவை தலைமேற்கொண்டு, சிவ மரபிற்கேற்பப் பாண்டியர் எனும் பெயர் பூண்டு வாழ்ந்தது. மற்றொரு தொகுதி பயிர் செய்தல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களில் விருப்புற்று மருதத்திலும் கடற்கரையிலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

எனவே பாண்டியனாக அவதரித்தவன் சிவனே என்றும் கூறலாம் அல்லவா...!   

No comments:

Post a Comment